Tuesday, 23 August 2022

Manage your finance part2

 

    சமீபத்தில் ஒரு  கல்லூரியின் தொழில்நுட்ப மாநாட்டிற்கு சென்றிருந்தேன் . அங்கு  பலதரப்பட்ட தொழில் விற்பன்னர்கள் ,வல்லுநர்கள் , முனைவர் , முதுகலை பட்டம் பெற்றவர்கள் என பலரிடம்  உரையாட வாய்ப்பு கிடைத்தது .  அதில்  அனைவரிடமும் ஒரு விஷயம்  பொதுவாக காணப்பட்டது . அது  அவர்கள் தங்கள் திறமைகளை , தொழிலை மேம்படுத்த உழைக்கிறார்கள் , ஆனால்  பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களில்  கவனம் செலுத்துவதில்லை . முதல் பாகத்தில்  சொல்லப்பட்ட உதாரணம் போல வருமானத்தை பெருக்க செலுத்தும் கவனம் செலவிலும் ,சேமிப்பிலும்  , முதலீட்டிலும்  பலர் செய்வதில்லை .

எனக்கு மேலும் ஆச்சர்யத்தை கொடுத்த விஷயம் , மாதம் பல 'ல' கரங்களை , சம்பளமாக பெரும் ஒருவர் பல விதமான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் ,பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர விரும்புவதும் கூறியதுதான் .

 

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும் என்றார் வள்ளுவர் பெருந்தகை

 

செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும். இந்த சிந்தனையை நம் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  கொண்டுவந்தார் .

 இன்றைய இளைஞர்களின் பொருளாதார போக்கு சற்று வித்தியாசமாக இருப்பதை காண முடிகிறது . அது 'instant gratification' எனும் உடனடி மனநிறைவு . சேமித்து வாங்கும் போக்கு தற்போது  , கடன் வாங்கி , கடன் அடைக்கும் மனநிலைக்கு மாறிவிட்டது . இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் , அடிப்படை விஷயமாக 'உடனடி மனநிறைவு' எண்ணமே மேலோங்கி நிற்கிறது .

 

இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது . அதன் நோக்கம் , நமது  வீட்டின் பொருளாதாரம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை தெளிவு படுத்தவே .

 

பட்டியலில் ,செலவு  பலருக்கு நீண்.........டு இருந்தாலும் ஆச்சரியமில்லை.  அது அவர்களுக்கே தெரியாமல் நுழைந்த வாழ்க்கை முறையின் வெளிப்பாடு.

முதலில் பட்டியலில் உள்ள செலவுகளை பார்ப்போம் .

உக்தி 1:

பட்டியலை இரண்டு பிரிவுகளாக பிரித்து ,சுருக்கவும் .

முதலாவது ' அத்தியாவசிய செலவுகள் - இது தவிர்க்கவே முடியாத செலவுகள் , இரண்டாவது -  குறைத்துக்கொள்ள கூடிய செலவுகள் .

முதல் பிரிவு வருமானத்தில் எத்தனை சதவிகிதம் , இரண்டாவது எத்தனை சதவிகிதம் ?  முதல் பிரிவைவிட இரண்டாம் பிரிவு அதிகமிருந்தால் நிச்சயமாக கூறலாம் நமது பொருளாதாரம் சரிய துவங்குகிறது என்று .மறு பரிசீலனை செய்யவும் .

 

உக்தி 2:

மாத்தி யோசி :

ஏற்கனவே பல கடன்கள் வாங்கியாச்சு ,மருத்துவ செலவு அதிகம் , குடும்பம் பெரியதாகி விட்டது,  பல செலவுகள் அத்தியாவசிய செலவாகிவிட்டது ,  இப்பொழுது என்ன செய்வது ?

 கடனா / சேமிப்பா ?   சொந்த வாகனமா / போக்குவரத்து துறை வாகனங்களா ? வீடு உணவா / வெளி உணவா ? ஒரே கடை மாளிகையா / பல கடைகளா ? என மாற்றி யோசிக்கவும் .

 உக்தி 3:

குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை : 

சூழ்நிலை காரணமாக பலர் கூட்டு குடும்பங்களிலிருந்து தனி குடும்பமாக உருவெடுத்துள்னர் . அனுபவமின்மை , நேரமின்மை காரணமாக அணைத்து உறுப்பினர்களும் பேசுவது அரிதாகிவருகிறது .  . சிறிய  ஆலோசனைகளும் பெரிய மாற்றத்தை வரவழைக்க வாய்ப்புள்ளது . எப்பொழுதுமே இரண்டு மூளைகளின்  ஆற்றல் , ஒன்றை விட அதிகம் . முயற்சி செய்யலாம் . 

 

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

 

இந்த பொருள் தரும் குறள்  எது , கூறும் விஷயம் என்ன ? அடுத்த பாகத்தில் பார்க்கலாம் .

 

Wednesday, 3 August 2022

Manage your finance part 1


                      பணம் பதினொன்றும் செய்யும்

காசு ,பணம் ,துட்டு ,மணி  இதை உச்சரிக்காமல் யாரும் இருக்கமுடியாது . ஒரு அறிஞர் சரியாகத்தான் சொன்னார்  “பணம் கத்தியை  போன்றது . சரியாய் பயன்படுத்தினால் மட்டுமே நம்மை காக்கும் “.

அதெல்லாம் சரி  'சம்பாதிப்பதற்கே பாடாய்  இருக்கு, செலவு வரவை மீறி இருக்கு ' இதில்  எப்படி  சேமிப்பது  ? எப்படி பயன்படுத்துவது  என்ற உள்ளத்தின் குமுறல்களுக்கு  ஆறுதல் தரவே இந்த பதிவு.

ஒரு சின்ன உதாரணம் . உங்கள் ஆண்டு வருமானம், செலவு இவ்வளவு என்று பட்டென்று கூறுங்கள் பார்ப்போம் . பலருக்கு வருமானம் தெரியும் செலவு தெரியாது .

முதலில் செய்யவ வேண்டியவை   எது ? செய்யக்கூடாதவை எது ?

பணத்தை பற்றிய புரிதல் நம்மிடம் இருக்கிறதா என்பதை சோதனை செய்யவேண்டும் .

ஆண்டுக்கு 3 லட்சம் வருமானம் என்று வைத்துக்கொள்வோம் , செலவு 4 லட்சம். என்ன செய்வது ?

வரவு - சம்பளம் மட்டும். செலவு ? அது  தெரியாமலே பல வழியில் வருகிறது.

ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்ப வேண்டுமென்றால் ,முதலில் நீர் வேண்டும் , பாத்திரமும் ஓட்டை இல்லாமல் இருக்க வேண்டும் . அதை போலவே நம் கையில் பணம் வேண்டுமென்றால்  செலவை நம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் . அதாவது ஓட்டையை அடைக்க வேண்டும் .

இதில் முதல் அடியாக பட்டியல் தயாரிக்க வேண்டும் . ஒரு  ஆண்டுக்கு  என்ன என்ன செலவுகள் ,எதிர் பார்த்த , எதிர் பாராவிதமான வரும் செலவுகளை கணக்கிடவேண்டும்.

எதற்கு ஒரு ஆண்டிற்கு பார்க்கவேண்டும் ?

இன்சூரன்ஸ் பிரீமியம் -வாகனம், ஆயுள் காப்பீடு ,உடல் நலக்காப்பீடு , போன்ற செலவுகள்  ஆண்டிற்கு  கணக்கிடப்படுகிறது .

மின் கட்டணம் - இரண்டு மாதத்திற்கொருமுறை  கணக்கிடப்படுகிறது .

இதே போல , சில நிறுவனங்களின் ஊக்கத்தொகை , போனஸ் (பங்கு ஊதியம்), முதலீட்டிற்கான வட்டி போன்ற வரவுகளும் ஆண்டிற்கே கணக்கிடப்படுகிறது .

 

நாம் மாத வரவு செலவு கணக்குகளை எழுதும்போது அவற்றை கணக்கிடாமல்போக வாய்ப்பு உள்ளது .மேலும் இது ஒவ்வொரு மாதமும் மாறுபடும்போது நம்மால் முக்கிய முடிவுகளை எடுக்க முடிவதில்லை .

இதற்காகவே ஆண்டிற்கான கணக்கை எழுதவேண்டும் .

 ஏன் ஆயுள் காப்பீடு செலவு கணக்கில் வருகிறது , சில நிறுவனங்கள் நம் ஆயுள் காப்பீடு தொகையை திரும்ப அளிக்கிறார்களே , இதற்கு பதில் இந்த கட்டுரையின் பிற பாகத்தில் கூறுகிறேன்  

ஒரு நல்ல பட்டியலில் என்ன இருக்க வேண்டும்

கணக்கிடக்கூடிய வரவு- செலவுகள் :

வரவு:

ஆண்டு வருமானம் :  மாத  சம்பளதாரர்களுக்கு  இது சுலபம் .

நிலையில்லா வருமானம் உள்ளவர்கள் ,கடந்த  ஆண்டு வருமானத்தை கணக்கில் கொள்ளலாம் .

சம்பளம் தவிர வேறு வருமானம் உள்ளவர்கள் , வாடகை மூலம் வருமானம் , விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் , பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் .வருமானம் ,முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டி  போன்றவைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் .

செலவு :

அத்தியாவசிய செலவுகளான மளிகை ,பால், வீட்டு வாடகை- (  வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மட்டும் ),  மாதாந்திர தவணை தொகை - EMI , எரிபொருள் - வாயு (காஸ் ),பெட்ரோல் , டீசல், மருத்துவச்செலவு  , கல்வி கட்டணம் ( தேவை பட்டால் கணக்கில் கொள்ளவும் ), பண்டிகை கொண்டாட்டங்கள் , போக்குவரத்து , கேபிள் , இன்டர்நெட் ,மொபைல் கட்டணம் , வீட்டு பணியாளர்கள் சம்பளம் ,இது தவிர  எதிர்பாராமல் நடக்கும் செலவுகள் : வாகன பழுது பார்க்க ஏற்படும் செலவு  , மருத்துவ செலவு , ஹோட்டல் , சுற்றுலா , என எதையும்  விடாமல்  பட்டியல்  தயாரிக்க  வேண்டும் .

சரி தயாரித்தாகிவிட்டது  அடுத்து  என்ன ?

 அடுத்த பாகத்தில்

Manage your wealth - Part 8 stock market

  பங்கு சந்தையில் முதலீடு தேவையா ? இன்று பல மெத்த படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை பெரும்பாலானோர்க்கு இருக்கும் மிகப்பெரிய...