Friday 18 November 2022

Manage your wealth - Part 8 stock market


 

பங்கு சந்தையில் முதலீடு தேவையா ?

இன்று பல மெத்த படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை பெரும்பாலானோர்க்கு இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் பங்கு சந்தையில்  முதலீடு தேவையா என்பது தான் .

இது நாள் வரை ஆயிரக்கணக்கான பதிவுகள் ,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வந்தாலும் பலருக்கு பங்கு சந்தை பற்றிய அச்சம் இருக்கத்தான் செய்கிறது .

நம்முடைய அடிப்படை கல்வியிலும் சரி , பல வகை இளநிலை ,முதுநிலை கல்வியிலும் சரி இதை பற்றிய உபயோகமான தகவல் கிடைப்பதில்லை , நமக்கு தெரிந்தவர்களிடம்  கேட்டாலும்  உபயோகமானதாக இல்லை , இன்டர்நெட்டிலோ வழிகாட்டுதல் தெளிவாக இல்லை என புலம்புவர்களுக்கானது இந்த  பதிவு .

பங்கு சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட் பற்றி பலரிடம் பேசினால்  நான் இத்தனை  ஆயிரங்கள் இழந்தேன் , இவ்வளவு நஷ்டம் வந்தது ,அதில் முதலீடா  என பயமுறுத்துகிறார்கள் . பங்கு சந்தை பணக்காரர்களுக்கு மட்டும் தான் , லாபம் கிடைக்கும் வழியல்ல என்ற மாயையை உருவாக்கி இருக்கிறார்கள் .

விஷயத்திற்கு வருவோம் . பங்கு சந்தை யாருக்கானது ? சுருக்கமாக சொன்னால் , அவசர தேவைக்கு இல்லாத பணத்தை முதலீடு செய்து , பொறுமையை காப்பவர்களுக்கு மட்டுமே .  புரியும் படி சொல்கிறேன் .

இன்னும் 10 ஆண்டுகளுக்கு என்னிடம் உள்ள 15 ஆயிரம் ரூபாய் எனக்கு தேவை படாது , என்னால் முதலீடு செய்யமுடியும் என்றால் ,அந்த  பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் .  இந்த தேவை ஒவ்வொருவருக்கும் வேறுபடும் .எவ்வளவு லாபம் தரும் ? இந்த கேள்வி புதியவர்களுக்கு மட்டுமே வரும் . பங்கு சந்தை வருடத்திற்கு இவ்வளவு தான் லாபம் என்று வங்கி  பிக்ஸெட் டெபொசிட் போல வருவதில்லை . ஒரு வருடம் 15 % லாபம் கிடைக்கலாம் , ஒரு வருடம் 20 % நஷ்டம் கிடைக்கலாம் . ஆனால் 10 ஆண்டுகளில் நாம் தேர்ந்து எடுக்கும் பங்குகளை பொறுத்து 12- 15 % லாபம் கிடைக்க வழியுண்டு .அதற்குத்தான் சொன்னேன் ஒரு குறுகிய  காலத்திற்குள் [ சுமார் 3 ஆண்டுகள் ] -கல்வி ,திருமணம் , என  பணத்தை சேமித்து வைத்திருந்த பணத்தை பங்கு சந்தையில் இறக்குவது ஏற்புடையதல்ல .

பங்கு சந்தை முதலீட்டிற்கு எவ்வளவு பணம் வேண்டும் ? வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் என்றாலும் போதுமானதே .வங்கியில் சேமிக்க புதிய கணக்கு துவக்குவது போல , பங்கு சந்தைக்கு டீமேட் என்ற கணக்கை துவக்க வேண்டும் . சில நிறுவனங்கள் முதலாம் ஆண்டிற்கு இலவசமாகவே தருகிறார்கள் .

 

நஷ்டம் அடையாமல் லாபம் கிடைக்குமா ? சென்ற பதிவில் தங்கம் பற்றி விவாதித்திருந்தேன் . தங்கம் லாபம் மட்டுமே தருமா ? தராது தானே ? நிலம் விலை குறையவே வாய்ப்பில்லை என்று விவாதிப்பவர்கள் , அந்த இடம் 4 ஆண்டுகளில் அதே  விலை விற்றாலும் நஷ்டம் தானே ?

 

பங்கு சந்தை பற்றிய ஒரு ரகசியம் கூறுகிறேன் ,  நாம் தேர்ந்தெடுக்கும் பங்கு , பொறுத்திருக்கும் காலம் ,இதைப்பொறுத்தே  நமக்கு லாபம் தரும் . இதில் தான் விஷயம் அடங்கி  உள்ளது . இந்த கலையை ஒரே நாளில் கற்றவர் உலகில் இல்லை .  பங்கு சந்தை பற்றிய  எண்ணத்தை மாற்ற  முதலில் கணக்கை  துவக்குங்கள் .அடுத்த நகர்வை  தொடர்வோம்  . சரிதானே ?


Thursday 17 November 2022

Manage your finance - part 7

 


தங்கம் வாங்கலையோ தங்கம்

 

ஒரு மிகப்பெரிய வெற்றியின் அடையாளமாகவும் ,பெருமையின் சின்னமாகவும் , பக்கத்து வீட்டுக்காரியின் பொறாமையாகவும் , சில  ஆண்களின் தூக்கமின்மையாகவும் இருப்பது ....... கண்டுபிடித்துவிடீர்களா  வேறென்ன  என்ன? தங்கம் தான் .

ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும்  ஒரு இளம் பொறியாளர்  முத்து .அவருக்கு  வெளிநாட்டில் தங்கி வேலை செய்யும் வாய்ப்பு (on  site ) கிடைக்கிறது . முத்து வின்  நண்பன்  கையில் இருக்கும்  இரண்டு  லட்சம் சேமிப்பை  கை மாற்றாக கேட்கிறார் .  மிக நெருங்கிய நண்பன் ஆதலால் முத்து கொடுக்கிறார் .பத்தே நாளில் நண்பன் தருவதாகவும் வாக்களிக்கிறார் .  முத்து  வெளிநாடு செல்ல , நாணயமுள்ள நண்பன் பணத்தை வங்கியில் செலுத்த வங்கி கணக்கு எண் தா என கேட்கிறார் .  ஆனால்  முத்து ' நான் ஊரில் இல்லை , இவ்வளவு பணத்திற்கான  செலவுகள் எனக்கும்  குடும்பத்திற்கும் இல்லை , நீயே  ஏதாவது முதலீடு செய்  என்றார் .

 

அந்த  நண்பன் , அவரின்  வீட்டில்  உள்ள தன்   பாட்டியை ஆலோசனை கேட்கிறார் . பாட்டியின் ஆலோசனை படி இரண்டு லட்சத்திற்கும் தங்க சங்கிலி வாங்கி , போட்டோ வையும்  பில் லையும்   வாட்ஸாப்பில் அனுப்புகிறார் . சங்கிலியை  பத்திரமாக தன் வங்கி லாக்கர் இல் வைக்கிறார் .  எல்லாம் நல்ல படியாகவே நடந்தது .

 

முத்து க்கு  இரண்டு ஆண்டு ப்ராஜெக்ட் முடிந்து , வேறு ஒன்று கிடைக்க அப்படியே கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது . நடுவில் சில தடவை வந்து ,ஊரில், பெற்றோரையும் நண்பர்களையும் பார்த்து செல்கிறார் .

6 ஆண்டுகள் கழித்து வந்து ,இங்கே வீடு வாங்க  எண்ணுகிறார்  . கையிருப்பு போக  மேலும் 3 லட்சம்  பணம் தேவை தங்க சங்கிலியை விற்க எண்ணுகிறார் . நண்பன் லாக்கரில் இருந்து கொண்டுவந்து கொடுக்க , இருவரும் நகைக்கடைக்கு செல்கிறார்கள் .  நகையின்  மதிப்பை  கேட்டவர் , தலை சுற்றி விழாத குறை , வாங்கிய விலையை விட இருபதாயிரம் குறைவு .அதாவது 1.8 லட்சம் மட்டுமே . இது எப்படி சாத்தியம் ?

நாம் பல முறை செய்தி தாளிலும் ,டிவி யிலும் பார்க்கிறோம் , தங்கம் வரலாறு காணாத உச்சம் , கிராமுக்கு ரூபாய் 30  உயர்வு இப்படி . இவ்வாறு இருக்க வாங்கிய விலையை விட 20 ஆயிரம் எப்படி குறையும் .?

10 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 3100 ரூபாய் ( 2012 ம் வருடம் ) . செய் கூலி , சேதாரம்   10 % கூடுதல் . வாங்கிய நிமிடமே 10 % விலை அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது .ன்றைய விலை அதுவும் சுமார் 3050 ரூபாய்  .( ஜூன் 2019 ம் வருடம் மாத துவக்கத்தில் ). இப்படி இருக்க விற்பனை விலை  எப்படி கிடைக்கும் ?

ஏதேனும் இரண்டு நாட்களை எடுத்து நமக்கு ஏற்றார் போல கூறுவது என்  நோக்கமல்ல .  இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் 1. இதில் முத்து  தன் முதலீட்டை பற்றி அக்கறை காட்டவில்லை . 2. அடுத்தவரின் ஆலோசனை: - ஆலோசனை  வழங்கியவர் தங்கத்தில் லாபம் பெற்றிருக்கலாம் , எல்லோருக்கும் எல்லா நேரத்திலும்  ஏற்றதாக அமையாது .3. நோக்கம் அற்ற முதலீடு - எதற்கு முதலீடு செய்கிறோம் ,எவ்வளவு காலம், கிடைக்க வேண்டிய தொகை  போன்றவை பற்றிய தெளிவின்மை  4. தேர்ந்தேடுத்த முதலீடு - தங்க நகை என்பது  அணிந்து அழகு பார்க்க மட்டுமே - இதுவே அதன் முதல் நோக்கம் , தேவை படும் பொது விற்க , அடகு வைக்க இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் . நகையின் சந்தோஷத்தை விலை பேச  முடியாது . அது போலவே அணிகலனை முதலீடாக பார்க்க இயலாது . தங்கத்தின் மீது  முதலீடு செய்ய வேறு பல வழிகள் உண்டு .

சரி தங்கம் லாபம் தருமா ? தரும்...ஆனால் தராது ...எப்படி இரண்டும் சாத்தியம் ?

கடந்த ஒரு வருடத்தின் லாபம் 15 %  ஒரு வருடத்திற்கு முன்  ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்க நாணயங்களை வாங்கி இன்று விற்றால் கிடைக்கும்  லாபம் 15 ஆயிரம் . உண்மைதான் . அதே தங்கம் கடந்த 5 ஆண்டுகளில் கொடுத்த லாபமும் ஆண்டுக்கு 9.15 % மட்டுமே .  இதுவே 2009 ம் வருடம் விலை படி ஒரு கிராம்  ரூபாய் 1450 - நமக்கு கிடைக்கும் வருமானம் வருடத்திற்கு 7.15 % மட்டுமே . சரி 2009ம் வருடம் வேண்டாம்  2006 ம் வருடம் என கொண்டால் 10.5% வருமானம் ,  அப்பாடா  இப்போது  சொல்லுங்கள் , தங்கம் லாபம்  தானே ?

 

அதனால் தான்  சொன்னேன் - தங்கம்  லாபம் தரும் சில நேரங்களில் தராது . காலம் தான் பதில் சொல்லும் .

சில மூத்த குடிமக்கள் அவர்களுக்கு தெரிந்த - பழக்கப்பட்ட  முறையாக செய்த முதலீடு  தங்கம் , நிலம் , வீடு மட்டுமே . அதில் அவர்கள் வெற்றி கிடைத்தது . அவர்கள் நிதானம் காத்தார்கள் .

 30 ஆண்டுகளுக்கு முன் தங்கம் வாங்கி  பாதுகாத்து இன்று விற்றால் பெருத்த லாபம் தந்திருக்கும்  தான் . ஆனால் அதே போன்று அடுத்த 30 ஆண்டுகள் இருக்குமா?

நகைகளின் மீது மோகம்  கொண்டு வருடத்திற்கு 4-5 முறை அணிந்து , வீட்டில் ,பேங்க் இல் வைத்த பூட்டி ,பாதுகாத்து   அதை முதலீடாக பார்ப்பது ஏற்புடையது அல்ல .

சரி நகை வாங்கலாமா வேண்டாமா?

நம் முதலீடு தங்கமாக இருக்கலாம் - நகைகளாக அல்ல - காசுகளாக கட்டிகளாக , ETF எனப்படும் பாத்திரங்களாக  என பல முறைகள் உள்ளது .

எவ்வளவு வாங்கலாம்?  பல பொருளாதார நிபுணர்களின் அறிவுரைப்படி  நம் மொத்த  முதலீட்டில் 2-5 % இருத்தல் நல்லது . 10 % க்கு மிகாமல் இருப்பது உத்தமம் . வருடத்தில் 50 ஆயிரம் சேமிக்க நினைத்தால் , தங்கதின் மீது முதலீடு 5 ஆயிரம் இருப்பது நலம் .

 

இப்போது சொல்லுங்கள் உங்கள் சிந்தனை எப்படி ? .. மீண்டும் தொடர்வோம்


Thursday 13 October 2022

Manage your finance-6 :157 கோடி பரிசு , ஆனால் கடனாளி .

 


157 கோடி பரிசு , ஆனால் கடனாளி .

கடந்த சில நாட்களில் ,  வரவு -செலவு கணக்கு வைத்தல் - பட்ஜெட் , கடன் அட்டை , EMI - மாத  தவணை , 50-30-20 விதி  என பல விஷயங்களை பற்றி விவாதித்திருந்தோம் , அதன் தொடர்ச்சியாக உலகமே உற்று நோக்கியுள்ள ஒரு நிகழ்வை உங்களுக்கு கூறுகிறேன் .

உலகின் தலை சிறந்த டென்னிஸ் வீரர்கள் யார் யார் என  தேடி பார்த்தால்  இவர் பெயர் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். விம்பிள்டன் போட்டி நடந்த சமயம் , தர வரிசையில் இல்லாத  ஜெர்மனியை சேர்ந்த  17 வயதே நிரம்பிய ஒருவர் ,தேர்ந்த வீரர் ஒருவருடன் விளையாடுகிறார் . தர வரிசையில் இல்லாத  ஒருவர் வெற்றி பெறுவார் என்று ,எவரும் ஊகித்திருக்க மாட்டார்கள், கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்  .ஒரு உலக சாதனை நிகழ்ந்தது . அது சமயம்,மிக இளம் வயதில் விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தை பெற்றவர்   இவர் மட்டுமே . பிறகு  உலகமே இவரை தூக்கி கொண்டாட  பத்தே ஆண்டுகள், தன திறமையை மிக நேர்த்தியாக செதுக்கிக்கொள்ள  49, பட்டங்கள் வென்றார் .இவர் பெற்ற பரிசு தொகை எவ்வளவு தெரியுமா ? தலை சுற்றி விழாதீர்கள் . 20 மில்லியன் யூரோ . நம் ரூபாய் மதிப்பில் சுமார் 157 கோடிகள் .30 வருடங்களுக்கு முன் இது மிகப்பெரிய்ய்ய  தொகை . இன்றைய மதிப்பை தெரிந்துகொள்ள 32 ஆல் பெருக்கி கொள்ளவும். யார் அந்த பெருமைக்குரிய வீரர் ? 1985- 1995 ஆண்டுகளில்  முதல்  மிக பிரபலமான நட்சத்திர வீரர்,  கண்டு பிடித்து விடீர்களா ? அவர்  போரிஸ் பேக்கர்  !

காலங்கள் உருண்டோட ,30 ஆண்டுகள் கடந்தது . பணம் ,பெயர் ,புகழ் எல்லாம் , கிடைத்து . கூடவே கடனும் சேர்ந்தது . ஏன்?, திறமைகளை வளர்த்து ,ஈட்ட  தெரிந்தவருக்கு சேர்த்த பணத்தை கையாள தெரியவில்லையே ?  என்ன ஆனது ? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் , நீதிமன்றம் அவரை  திவால் ஆனதாக கூறியது . தான்  பெருமையாக , பொக்கிஷமாக வைத்துள்ள கோப்பைகளை ,ஏலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது .

இந்த கடன் ஒரு நாளின் வந்தது இல்லை . இதுபோன்ற பேரிழப்பிற்கு  மூன்று  முக்கிய காரணிகளை  சொல்லலாம்   மிக ஆடம்பரமான வாழ்க்கைமுறை , தவறான முதலீடுகள்,  கடன் - (கடன் அட்டைகள் மூலம் வாங்கும் கடன் , வேறு சில கடன்கள் )

ஒரு புள்ளி விவரப்படி , கடந்த 7 ஆண்டுகளில்,நம் நாட்டில்  ,குடும்பம் சார்ந்த கடன்  11.3 %    உயந்துள்ளது ( 2012 ஆண்டில்   8.7 % ஆக இருந்தது ).  ,2009 ஆண்டில்   மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேமிப்பு  25 % ஆக  இருந்தது,   2018 ஆண்டில் 17 %   குறைந்து விட்டது .

இந்த மாற்றத்திற்கு என்ன காரணங்கள் ?  பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கள் என்ன ?  தொடர்ந்து எங்களோடு பயணம் செய்யுங்கள் .

 

Sunday 2 October 2022

Manage your finance: Part 5

 

இது வரை பட்ஜெட் , கிரெடிட் கார்டு (கடன் அட்டை), EMI  , போன்றவற்றை விவாதித்திருந்தோம் .

சிலருக்கு மாதத்தின்  முதல் நாளை எப்படி ஆரம்பிப்பது என்பது பற்றி இன்னும் குழப்பம் இருக்கலாம் .

. ஒரு கூட்டத்தில் உரையாற்றும் நேரம் .நான் சேமிப்பு என்றால்  என்ன என்று கேட்டேன் ? ஒரு நடுத்தர , உயர் பொறுப்பிலுள்ள அதிகாரி சற்றும் தாமதிக்காமல் 'செலவை வரவிலிருந்து கழித்தால் கிடைப்பது ' என்றார் . இப்படித்தான் பலரும் புரிந்திருக்கிறார்கள் . பொருளாதாரத்தின் ஓரு முக்கியமான ரகசியத்தை இப்போது உங்களுக்கு கூறுகிறேன் . அதாவது மாதத்தின்  முதல் நாள்  நாம் செய்ய வேண்டியது , சேமிப்பு ,முதலீடு போன்றவையே .  மீதம் உள்ள தொகையை தான் செலவு செய்யவேண்டும் .  இந்த அடிப்படை தத்துவத்தை நாம் தவற விடுவதில் தான் சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம் .

 உங்களுக்கு ஒரு 30000 ரூபாய்  வரவு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம் . அதில் செய்ய வேண்டியது  முதல் வேலையாக ரூ 6000 சேமிப்பு , மீதமுள்ள ரூ 24000 ல் , ரூ 15000 அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கானதாக இருக்கவேண்டும் . இதில் உங்களது வீட்டு வாடகை அல்லது வீட்டுக்கடன், மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி, தொலைபேசிக் கட்டணம், மருந்துகள் வாங்குவது, சமையல் சிலிண்டர் வாங்குவது மற்றும் தொலைக்காட்சிக்கான கேபிள் கட்டணம் போன்ற பயன்பாடுகளுக்கான செலவுகள், மளிகைச் சாமான்கள், அலுவலகம் செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகள் என அனைத்து செலவுகளும் அடங்கவேண்டும் .

சரி மீதம் உள்ள ரூ 9000 ? அது உங்களுக்கானது ,உங்கள் குடும்பத்திற்கானது . உங்கள் மகிழ்ச்சிக்கானது .ஷாப்பிங், சினிமாவுக்குச் செல்வது, ஹோட்டல்களில் உணவருந்துவது, சொந்த ஊர் அல்லது சுற்றுலா செல்வது போன்ற உங்கள் விருப்பத்துக்குரிய, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கான செலவுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்த  தொகை அனைத்தையும் செலவழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

இதுவே 50-30-20 விதி என்பர் . ரூ 100 ல் 50% வாழ்க்கை செலவு, 30 %  மகிழ்சிக்கு ,20 % சேமிப்பு .

இதில் முதலில் வரவேண்டியது சேமிப்பு,வாழ்க்கை செலவு , மகிழ்ச்சிக்கு செலவு . இதே  விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டிய கட்டாயமில்லை , அனால் இருப்பது சிறப்பு . மேலும் சிலர் 30 % சேமிப்பு , 20 % இன்ன பிற செலவுக்கு என ஒதுக்குபவர்கள் பொருளாதார சிக்கல்களில் பெரும்பாலும் மாட்டுவதில்லை . இந்த 50-30-20 ஒரு வழி காட்டுதல்தான் . எந்த  செலவை ஏற்றினாலும் இறங்கினாலும் , 20 % சேமிப்பை குறைத்தல் ஆகாது . சிலருக்கு 55-25-20  அல்லது 45-25-30 எந்த  விகிதாச்சாரம் இயலுமோ அதை பின்பற்றவும் .நினைவில் கொள்ளவேண்டியது 20 சதவிகிதம் குறையக்கூடாதென்பதே . 20 % பணத்தை என்ன செய்வது ? வங்கியில் சேமிக்கலாமா ? வீட்டில் வைக்கலாமா ? தங்கம் வாங்கலாமா? பல கேள்விகள் . தொடர்ந்து எங்களோடு பயணம் செய்யுங்கள் ,  விடைகள் கிடைக்கும் .மீண்டும் சந்திப்போம்

Manage your wealth - Part 8 stock market

  பங்கு சந்தையில் முதலீடு தேவையா ? இன்று பல மெத்த படித்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை பெரும்பாலானோர்க்கு இருக்கும் மிகப்பெரிய...